சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் போஸ்ட்: மெட்டாவுக்கு மத்திய அரசு அதிரடி வலியுறுத்தல்

மெட்டா தலைமை நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
MeitY urges Meta to remove violence
Published on: 
Summary

இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையில் வன்முறையை தூண்டும் பதிவுகளை கண்டறிந்து, அவற்றை தடுக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்டா தலைமை நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வகையான செயலிகளை பயன்படுத்துவோர் சமூகத்தில் அமைதியை குலைக்கும் சில பதிவுகளை பதிவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

பொது அமைதியின்மை

ஒரு பயனர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியியை திறக்கும் போது, குழப்பம், வன்முறை மற்றும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் பதிவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதாக போலியான செய்திகள் பரப்பப்பட்டன.

புகார்கள்

இந்த வகையான போலியான பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவுவதால், அதனை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் விதிகளின் கீழ் மெட்டா நிறுவனம் ஆறு விதிகளை பின்பற்றுமாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வேண்டுகோள் விடுத்துள்ளது.

6 விதிகள்

அதன்படி பொது அமைதியின்மையை ஏற்படுத்தி, வன்முறை மற்றும் சட்டவிரோத செயல்களைத் தூண்டக்கூடிய பதிவுகளை கண்டறிந்து தீர்வு காண தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து பயனர்களை தவறாக வழிநடத்தக்கூடிய, திரித்துக் கூறப்பட்ட பதிவுகளை பரிந்துரை செய்யாமல் மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொது நிகழ்வுகளை காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிந்துரை செய்யும்போது போதுமான பின்னணித் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நான்காவதாக, செயலிகள் சில பதிவுகளை பரிந்துரை செய்யும்போது அதுதொடர்பான நம்பகமான தகவல்களின் பொருத்தமான பன்முகத்தன்மையை வழங்க முயல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து பரிந்துரை அமைப்புகள் மூலம் கணிசமான அளவில் தவறான கருத்துகள் பரவி, பொதுமக்களிடையே பரவலான குழப்பம், அச்சம், வன்முறை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை விரைவாக அடையாளம் கண்டு,

அதனை மதிப்பாய்வு செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வழிமுறைகளை வலுப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இறுதியாக, மெட்டா நிறுவனம் சட்ட அமலாக்கத்துறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுடன் உரிய நேரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ஆல் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com