

ஆந்திர பிரதேசம் - சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்களுடன் இணைந்து மாநில காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மரேடுமில்லிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மாட்வி ஹிட்மா, இந்த வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து போலாவரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர பிரதேசம் - சத்தீஸ்கர் எல்லை பகுதியில், சி.ஆர்.பி.எஃப். வீரர்களுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கணிசமான அளவிலான வெடிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கைப்பற்றியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
காவல் கண்காணிப்பாளரால் அமைக்கப்பட்ட சிறப்பு படை, சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் உதவியுடன் மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் உளவு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருட்கள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில், 670 'பேரல் கிரனேடு லாஞ்சர்' (BGL) குண்டுகள், 42 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள், 250 கிராம் வெடிமருந்து, 12 பூஸ்டர் அல்லது வெடிபொருள் வளையங்கள், ஏழு 'பார்மர்' (Bharmar) துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் சுமார் ஆறு மீட்டர் நீளமுள்ள ஃபியூஸ் (திரி) ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
மேலும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண பெட்டிகள் உள்ளிட்ட 20 வகையான மருத்துவ பொருட்களையும் காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்து மீட்டனர்.
பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைக்கவும், இப்பகுதியில் அவர்கள் நடமாட்டத்தின் போது உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் மாவோயிஸ்டுகள் இந்த வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.