

ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்நிலையத்தில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கம்ஹாரியா காவல் நிலையத்திற்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இரவு பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார்.
தன் கணவர் உடனான சர்ச்சரவு குறித்து புகார் அளிக்க வந்த அவரை காவல்நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் வைத்து வயர்லெஸ் ஆபரேட்டர் இருந்த போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண் மேலதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு சரைகேலா சப் டிவிஷன் போலீஸ் அதிகாரி அனுபவ் பரத்வாஜுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ஸ்வர்கியா உத்தரவிட்டுள்ளார்.
துணைப் பிரிவு காவல் அதிகாரி அனுபவ் பரத்வாஜின் அறிக்கையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் கடமையில் கவனக்குறைவு, பொறுப்பற்ற நடத்தை மற்றும் ஒழுங்கின்மை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கம்ஹாரியா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து காவலர்களை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ஸ்வர்கியா இடைநீக்கம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசை பாஜக விமர்சித்துள்ளது.
மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன என்றும் காவல்துறை யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் காவல்துறை அதிகாரிகள் தங்களது மேலதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பதவிகளைப் பெற்று வருவதாக ஜார்க்கண்ட் பாஜக தலைவர் ஆதித்யா சாஹு குற்றம் சாட்டியுள்ளார்.