

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஜூடோ வீரர்கள் ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், இந்த வெற்றிகள் இந்தியாவில் ஜூடோவின் பிரபலத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸ் வஸா-அரி (10-0) என்ற கணக்கில் வீழ்த்தி ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.
அதே சமயம், அஸ்மிதா தனது நிதானமான மற்றும் உறுதியான ஆட்டத்தின் மூலம் கனடாவின் ஹைடி குவாச்-ஐ யூகோ (2-1) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
எக்ஸ் தள பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பையும் சிறப்பான செயல்திறனையும் பாராட்டி, எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்தினார்.
இதுகுறித்த பதிவில், "இந்திய ஜூடோவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்! தங்கம் வென்ற ஹர்ஷ் சிங்குக்கு வாழ்த்துகள். அவரது பேரார்வமும் அர்ப்பணிப்பும் இந்த அபாரமான செயல்பாட்டில் தெளிவாக பிரதிபலிக்கின்றன. அவரது வரவிருக்கும் முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டார்.
மற்றொரு எக்ஸ் தள பதிவில், ஜூடோவில் தங்க பதக்கம் வென்ற அஸ்மிதா டேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது செயல்திறனை பாராட்டி, இது இந்தியாவில் ஜூடோ விளையாட்டை பிரபலப்படுத்த உதவும் என்றும் கூறினார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தினார்.
"உண்மையிலேயே ஒரு பொன்னான செயல்பாடு! ஜூடோ மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் தங்கம் வென்ற அஸ்மிதா டே-யை நினைத்து பெருமைப்படுகிறேன்! இந்த செயல்பாடு என்றும் நினைவில் இருக்கும். மேலும் ஜூடோவை இன்னும் பிரபலப்படுத்த இது பங்களிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, இன்று 48 கிலோ ஜூடோ பிரிவில் அஸ்மிதா டே தங்கம் வென்றதை தொடர்ந்து, ஹர்ஷ் தனது கட்டுக்கோப்பான ஆட்டத்தின் மூலம் இப்போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது ஜூடோ தங்க பதக்கத்தை உறுதி செய்தார்.