

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளதை அடுத்து உள்ளூர் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்திய உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
"பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறுதுணையாக நிற்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.