

அரியானாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணையும் அவருடன் இருந்த ஆறு மாத குழந்தையையும் பிட்புல் நாய் ஒன்று கடித்ததை அடுத்து, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவின் சோனிபட் பகுதியில் ஆறு மாத குழந்தையுடன், அவரின் அத்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இருந்த வீட்டு உரிமையாளரின் பிட்புல் நாய் ஒன்று அவிழ்த்து வெளியே விடப்பட்டிருந்தது.
இதையடுத்து குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை, திடீரென பார்த்து பிட்புல் நாய் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தது.
இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண்மணி, அங்கிருந்து செல்ல முயன்றபோது, அந்த நாய் அவர்கள் மேலே தாவியது.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்ணை, பிட்புல் நாய் கை மற்றும் கால்களில் கடித்தது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு படுகாயமடைந்த பெண்ணையும், குழந்தையையும் ரோத்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேபோன்று டெல்லியின் வினய் என்கிளேவ் பகுதியில் ஆறு வயது சிறுவனின் வலது காதின் ஒரு பகுதியை பிட்புல் நாய் கடித்து குதறியது.
இதையடுத்து ஆக்ரோஷமான நாயை கட்டி வைக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நாய் உரிமையாளர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாய் உரிமையாளர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்தியாவில் காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்ரோஷமான நாய் இனத்தை சேர்ந்த பிட்புல் மற்றும் ராட்வீலர் உள்ளிட்ட சில நாய்கள், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.