

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உறவுகளை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்களை பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக சிபிஐ(எம்) தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பினராயி விஜயன், "சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை, பாலஸ்தீனப் பிரச்சினையில் காங்கிரஸின் தெளிவான இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் பலியாகும், நமது காலத்தின் மிக மோசமான இனப்படுகொலையை காசா சந்தித்து வரும் வேளையில், அவர்களின் கொலைக்குக் காரணமான தேசத்துடன் வலுவான உறவுகளையும் ஆயுதக் கொள்முதலையும் ராகுல் காந்தி வெளிப்படையாக ஆதரிக்கிறார்.
இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கும் காசாவின் நிலைமைக்கும் இடையில் ஒரு ராஜதந்திர சமநிலையை ஏற்படுத்த ராகுல் காந்தி மேற்கொள்ளும் முயற்சியை நியாயப்படுத்த முடியாது.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரித்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வெளியுறவுக் கொள்கை மரபை ராகுல் காந்தி குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்.
மனிதநேயமே சோதிக்கப்படும்போது ஒரு சமநிலையான நிலைப்பாட்டைப் பின்பற்ற முடியாது" என்று அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 18 அன்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானி ராபர்ட் பேப்புடன் நடத்திய உரையாடலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இஸ்ரேலுடனான இந்தியாவின் மூலோபாய உறவை ஆதரித்துப் பேசினார்.
ராகுல் பேசியதாவது, "இஸ்ரேலுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது, அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வாங்குகிறோம். ஆனால், நாங்கள் 150 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மிகப் பெரிய நாடு.
நமது வெளியுறவுக் கொள்கையானது, மற்றவர்களுக்கு எது நல்லது என்பதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படாமல், நமக்கு எது நல்லது என்பதை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்," என்று கூறினார்.
அதேநேரம் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளையும் ராகுல் காந்தி கண்டித்தார்.