

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் சிட்டி சென்ட்ரல் பூங்காவில் மரத்தின் அடியில் கிழிந்த ரூ.500, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள், ஒரு பெண்ணின் பான் கார்டு, பழைய எல்.ஐ.சி ஆவணங்கள் கிடந்தன. பொதுமக்கள் தகவலின்பேரில் போலீசார் சிசிடிவி மூலம் கே.ஜி.எச் டவுன் வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவை கண்டறிந்து, அவர் மனைவிக்கு பயந்து சேதமடைந்த நோட்டுகளை கிழித்து வீசியது தெரியவந்தது.
ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் துவாரகநகர் ஆர்.டி.சி வளாகத்திற்கு அருகிலுள்ள சிட்டி சென்ட்ரல் பூங்காவில் ஒரு மரத்தின் அடியில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் கிடந்தன.
நடைப்பயிற்சிக்கு வந்த மக்கள் இந்த நோட்டுகளைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்கு உதவி ஆணையர் கே.லட்சுமண மூர்த்தி மற்றும் டூ டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று நோட்டுகளை ஆய்வு செய்தனர்.
கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூ.500 நோட்டுகள், அத்துடன் ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகளும் அதில் இருந்தன. மேலும், ஒரு பெண்ணின் பான் கார்டு மற்றும் பழைய எல்.ஐ.சி பத்திர ஆவணங்களும் அதில் இருந்தன.
போலீசார் அவற்றைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், கே.ஜி.எச் டவுனில் உள்ள தாடி விதியைச் சேர்ந்த வியாபாரி ஆதிமூலபு சூர்ய ராவ் என்பவர்தான் இந்த நோட்டுகளைக் கொட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்த போது, புதிய ரூபாய் நோட்டுகளை குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். பல நாட்களாக பெட்டியிலேயே விடப்பட்டிருந்ததால் ரூபாய் நோட்டுகள் அழுக்காகி சேதமடைந்துவிட்டதாக அவர் கூறினார். மனைவி, குடும்பத்தினர் திட்டிவிடுவார்கள் என்ற பயத்தில் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.