விலங்குகள் மீதான பரிசோதனைகள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும் - பீட்டா இந்தியா வலியுறுத்தல்!

இந்த புதிய விதிகள் தெரு நாய்கள் மற்றும் பூனைகளை ஆய்வகப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது
விலங்குகள் மீதான பரிசோதனைகள் குறித்த மத்திய அரசின் புதிய விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் - பீட்டா இந்தியா வலியுறுத்தல்!
Published on: 

விலங்குகள் மீதான பரிசோதனைகள் குறித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வரைவு விதிகளுக்கு பீட்டா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், விலங்குகளுக்குப் பதிலாக நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஆய்வகங்களில் உள்ள உள்ளூர் நெறிமுறைக் குழுக்களே நாய், குதிரை, பன்றி போன்ற பெரிய விலங்குகள் மீதான மிதமான சோதனைகளுக்கு அனுமதி அளித்துக் கொள்ள முடியும்.

இதனால் மத்திய அரசின் 'விலங்குகள் மீதான சோதனைக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக் குழுவின்' நேரடி கண்காணிப்பு மற்றும் தன்னாட்சி அதிகாரம் பலவீனமடையும் என பீட்டா கூறுகிறது.

மேலும் இந்த வரைவு விதிகள், விலங்குகளுக்குத் தீவிரமான மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் சோதனைகளுக்கும் வழிவகை செய்வதாக பீட்டா குற்றம் சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் விலங்குகளைப் பயன்படுத்தாத நவீன ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், அதற்கு முக்கியத்துவம் தராமல் இந்த புதிய விதிகள் விலங்கு சோதனைகளை எளிதாக்குவதாக கவலை தெரிவித்துள்ளது.

எனவே, தற்போதுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை வலுவிழக்கச் செய்யாமல், வனவிலங்குகள் மற்றும் தெருவிலங்குகளைப் பாதுகாக்கும் கடுமையான சட்டங்களையும், விலங்கில்லா மாற்று ஆராய்ச்சி முறைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com