

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக வந்த மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த 19 வயது இளைஞர் சாஹில் லோசப் என்ற இளைஞருடன் இன்று டெல்லி நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்திற்கு சென்ற அவர், இவ்விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யும்படி காவலர்களை கோரினார்.
ஆனால் காவலர்கள் எப்ஐஆர் பதிய மறுப்பு தெரிவிக்கவே, காவல்நிலையத்தில் வெளியே அமர்ந்து ராகுல் தர்ணாவில் ஈடுபட்டார்.
தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக கோரி சிஜேபி தலைமையில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் போராட்டம் நடைபெற்றது.
ஜூலை 20 நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கிய முதல் நாளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கினர்.
மேலும் ஆர்ஏஎப் படையினர் மாணவர்கள் மீது ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உடலில் பெல்லட் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக சாஹில், உடலில் கடுமையான காயங்கள் இருந்ததன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவரின் ஒரு பக்க கண் பார்வை பரிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவருடன் ஏற்கனவே ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்து இவ்விவகாரத்தை எழுப்பிய ராகுல் இன்று அவருடன் காவல்நிலையம் சென்று எப்ஐஆர் பதிய வலியுறுத்தியதும் அதற்கு போலீஸ் மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்லட் துப்பாக்கிகளில் இருந்து ஒரே நேரத்தில் ரப்பர் அல்லது ஈயத்தால் ஆன சிறு குண்டுகளை சுட முடியும். அது உடலில் புள்ளி புள்ளியான காயங்களை ஏற்படுத்தும்.
இதை பயன்படுத்த மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவ்வாறிருக்க அமைதியான முறையில் பேரணி சென்ற இளைஞர்கள் மீது இவை பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.