

டெல்லி காவல்துறையின் அமைதி பாத்திரத்தில் கையெழுத்திட இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா மறுத்துள்ளார்.
அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக அமைதிப் பத்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைதியின் பெயரில் போராட்டம் நடத்துவதற்கான அரசியலமைப்பு உரிமையை பறிக்க முயல்வதாகவும் இந்திய மாணவர் சங்க (AISA) தலைவர் நேஹா போரா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் எஸ்ஐஆர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே களத்தில் போராடி வருபவர் நேஹா போரா. பலமுறை அவர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடைசியாக அவர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் கடந்த பின்னர் விடுவிக்கப்பட்டார். இது சட்டவிரோதமானது என நேஹா தரப்பினர் குற்றம்சாட்டினர்.
இதனிடையே டெல்லி கன்னாட் பிளேஸில் போராடட்ம நடத்தி அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நேஹா போரா மீது டெல்லி காவல்துறை அவருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி காவல்துறை வழங்கிய விளக்கம் கோரும் அறிவிப்பை எதிர்த்து நேஹா போரா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்வண்ணம் இனி போராட மாட்டேன் என அமைதி பிணை பத்திரத்தில் கையெழுத்திட நேஹா போரா கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் அவர் அதை மறுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைதிப் பத்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு கடந்தகால சம்பவங்களை உதாரணமாக கூறினார்.
நேஹா பேசுகையில், "சிஜேபியின் அபிஜித் தீப், சௌரப் தாஸ் மற்றும் அஷுதோஷ் உள்ளிட்ட பல ஆர்வலர்கள் கடந்த காலத்தில் அந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஒருமுறை பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டால் , எந்தவொரு அமைதியான போராட்டத்திற்காகவும் காவல்துறையினர் நம்மைக் கைது செய்து சிறைக்கு அனுப்புவது எளிதாகிவிடும்.
அத்தகைய பத்திரத்தில் கையெழுத்திடுவது நமது அரசியலமைப்பு உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்குச் சமம்.
எந்த வன்முறையும் நிகழவில்லை, பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.
இருப்பினும், நிர்வாக அமைப்பு அறிவிப்புகள் மற்றும் பிணைப்பத்திரங்கள் மூலம் அதே உரிமையை அரசு ஒடுக்கி வருகிறது.
சட்டத்தின் பாதுகாவலர்களும் அரசியலமைப்பின் காவலர்களுமான நீதிமன்றங்கள், இந்த முரண்பாட்டை கவனத்தில் கொண்டு குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கையுடன் இருக்குறேன்" என தெரிவித்தார்.
இதே செய்தியாளர்கள் சந்திப்பில் வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) சர்ச்சை பற்றி பேசிய நேஹா, "நாட்டில் சுமார் 13 கோடி மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக வாக்களித்து வருபவர்களின் உரிமைகள் திடீரெனப் பறிக்கப்பட்டால், அவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?
வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மக்கள் அமைதியான முறையில் குரல் எழுப்பி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்கப் போராட்டங்களை நடத்தினால், அதை அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்" என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு அரசை அவர் கேள்வி எழுப்பினார்.
எது அமைதி?
தொடர்ந்து பேசிய அவர், "அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக சாலைகள் வெறிச்சோடி இருப்பது அமைதியா, அல்லது மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுவது உண்மையான அமைதியா?
அமைதி என்பது அரசாங்கத்திற்குப் பயனளிக்கும் வகையில் மட்டுமே வரையறுக்கப்படக்கூடாது. மக்கள் கேள்வி கேட்பதைத் தடுப்பது ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல.
நியாயமாகக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு முயற்சியும் பொது அமைதியைக் குலைக்கும் முயற்சியாக சித்தரிக்கப்படுகிறது." என சாடினார்.
முன்னதாக கடந்த ஜூன், ஜூலையில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் உடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் நேஹா போராவும் ஒருவர்.
அதில் நேஹா போரா 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியதை அடுத்து அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றது.