சிறு துளி பெரு வெள்ளம்: 3 ஆண்டுகளாகச் சேர்த்த 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய நபர்!

ஜோசப்பின் இந்த சுவாரசியமான சேமிப்புப் பழக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Money Saving
Published on: 
Summary

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 51 வயதான பி. ரவி ஜோசப் என்ற பாஸ்டர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் சிறுகச் சிறுகச் சேமித்த 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள லக்செட்டிபெட் பகுதியைச் சேர்ந்த ஜோசப், மொத்தம் 12,300 பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, வாகனத்திற்கான முழுத் தொகையான ரூ.1.23 லட்சத்தைச் செலுத்தியுள்ளார்.

அவர் லக்செட்டிபெட்டில் உள்ள 'ஜெகதம்பா ஹோண்டா மோட்டார்ஸ்' ஷோரூமிற்கு நாணய மூட்டைகளைக் கொண்டு வந்த போது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த நாணயங்களை முழுமையாக எண்ணி முடிக்க மட்டுமே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.

வதந்திகளைப் புறந்தள்ளி விடாமுயற்சியால் சேர்ந்த தொகை

மளிகைக் கடைக்குச் செல்லும் போதும், தினசரிப் பொதுச் செலவுகளின் போதும் மீதி சில்லறையாகக் கிடைக்கும் 10 ரூபாய் நாணயங்களை ஜோசப் கடந்த அக்டோபர் 10, 2023 முதல் மிகவும் கவனமாகச் சேமிக்கத் தொடங்கியுள்ளார்.

பெரிய தொகையாகச் சேர்க்காமல், கையில் கிடைக்கும் ஒவ்வொரு 10 ரூபாய் நாணயத்தையும் அவர் உண்டியலில் சேமித்து வந்துள்ளார்.

குடும்பத்தினரின் எதிர்ப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவிய வதந்திகளால், ஜோசப்பின் குடும்பத்தினர் அவரை இந்தச் சேமிப்பை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர் வதந்திகளை நம்பாமல் தொடர்ந்து நாணயங்களைச் சேமித்து வந்துள்ளார்.

ஜோசப்பிற்கு ராயல் என்பீல்டு புல்லட் பைக் வாங்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், போதிய பணவசதி இல்லாததால், தனது நீண்ட நாள் கனவான புதிய இருசக்கர வாகனக் கனவை இந்த ஆக்டிவா ஸ்கூட்டர் மூலம் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டார்.

10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும்

பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளுக்கு மத்தியில், இந்தச் சம்பவம் ஒரு சிறந்த விழிப்புணர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்றும், அவற்றை வாங்குவதற்கு யாரும் மறுக்கக் கூடாது என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோசப்பின் இந்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சேமிப்புப் பழக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com