

பீகாரில் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பணம் கொடுக்க மறுத்ததால், ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து வந்த 25 வயது சைக்கோ இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஹித் திவாரி என்ற இளைஞர், தன்னை ஒரு காவலர் போன்றும், ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி போன்றும் காட்டிக் கொண்டு ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது ரெயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டு, முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்ட நபர்களிடம் அபராதம் வசூலித்து வந்துள்ளார்.
இதையடுத்து செப்டம்பர் 19 அன்று, ஐதராபாத்தில் இருந்து பணி முடித்துக் கொண்டு 21 வயதான நிதின் குமார் என்பவர் ரெயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிதினிடம் டிக்கெட் காண்பிக்குமாறு ரோஹித் கூறியபோது, அவர் மறுத்ததால் அபராதம் கேட்டுள்ளார்.
அபராத தொகையை செலுத்த நிதின் மறுத்ததால், ரெயிலில் இருந்து அவரை சைக்கோ இளைஞர் கீழே தள்ளியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது மகனை காணவில்லை என நிதினின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பக்ஸார் ரெயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரோஹித்தை செப்டம்பர் 21 அன்று கைது செய்தனர்.
ரோஹித் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆரா மற்றும் ஜக்ஜீவன் ஹால்ட் இடையே தண்டவாளத்தில் கிடந்த நிதினின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
மேலும் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கைலாஷ் குமார் என்பவரின் ஏ.டி.எம் கார்டு, பான் கார்டு, மாற்றுத்திறனாளி அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் ரோஹித்திடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரெயிலில் பயணம் செய்த மக்களிடம் போலி அதிகாரி போல் நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்டும், அவர்களை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தும் வந்த சைக்கோ இளைஞரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.