

மகாராஷ்டிரா மாநிலத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலாவின் விளம்பரத்தில் நடித்து, அதனை மறைமுகமாக பிரபலப்படுத்தியதற்காக, நடிகர்கள் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் பான் மசால் மற்றும் குட்கா பயன்பாட்டிற்கு அம்மாநில அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது.
இதையடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான, பான் மசாலா நிறுவனத்தின் ஏலக்காய் விளம்பரத்தில் ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகஎ ஷெரஃப் ஆகிய மூன்று நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் மீதான விளம்பரத்தில் நடித்ததற்காக, மூன்று நடிகர்களுக்கும் விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மூன்று நடிகர்களுக்கு எதிராகவும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விவரித்து, 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறும் கூறியுள்ளது.
மேலும் இந்த மூன்று நடிகர்களும் இந்தவிதமான விளம்பர பிரச்சாரத்தில் பங்கேற்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும், புகையிலை தொடர்பான அனைத்து விளம்பர உள்ளடக்கங்களையும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளிலிருந்து அகற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“குறிப்பிட்ட இந்த விளம்பரத்தை ஆய்வு செய்ததில், மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட ஒரு பொருளான பான் மசாலாவுடன் முக்கியமாகத் தொடர்புடைய விமல் பிராண்டை அந்த விளம்பரம் ஊக்குவிப்பது முதற்கட்டமாக தெரிகிறது.
விளம்பரத்தில் ‘விமல் ஏலக்காய்’ என்ற சொற்றொடர், விமல் பான் மசாலா பிராண்டுடன் ஒரு தொடர்பை உருவாக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடும் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருளின் வர்த்தக அடையாளத்தை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமையும்,” என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரியான துகாராம் முண்டே, நடிகர்களின் விளம்பர ஒப்பந்தங்கள், பிரச்சார சுருக்கங்கள், பணம் செலுத்தும் ஏற்பாடுகள் மற்றும் உரிய கவனம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் முழு நகல்களையும் தங்களுக்கு அனுப்புகுமாறு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் குட்கா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை காரணம் காட்டி, மகாராஷ்டிராவிற்குள் பான் மசாலா தயாரித்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் காட்டப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்படி, தவறான விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், மேலும் விளம்பரதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை எந்தவொரு விளம்பரத்தையும் தயாரிப்பதற்கு தடை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.