

பாகிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம், இந்திய கடற்படை வீரர் ரகசிய பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டதை அடுத்து, கோயம்புத்தூரில் உள்ள கடற்படை தலைமை பயிற்சி மையத்தில் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த அதிகாரியான பிரதீப் முகர்ஜி, கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் மாலுமியாக பணியில் சேர்ந்தார்.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் மாலுமியாக பணியமர்த்தப்பட்டார்.
இவரை சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பாகிஸ்தானிய பெண் உளவாளி தொடர்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து பெண் உளவாளி விரித்த வலையில் இந்திய மாலுமி சிக்கினார்.
அப்போது விசாகப்பட்டினம் கடற்படை தளத்துடன் தொடர்புடைய கடற்படை சொத்துகள், கடற்படை நகர்வுகள் மற்றும் செயல்பாட்டு அமைப்புகள் குறித்த முக்கிய விவரங்களை மாலுமியுடன் நட்பு பாராட்டி பாகிஸ்தான் உளவாளி பெற்றுள்ளார்.
இதையடுத்து பயங்கரவாத குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு உயரடுக்கு பிரிவான ஆந்திரப் பிரதேச காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு, சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் தடயங்களை மாலுமியிடம் கண்டறிந்தனர்.
ரகசிய தகவல்களை பரப்புவதில் மாலுமியின் பங்கு உறுதிசெய்யப்பட்டவுடன், அவரைக் கைது செய்ய புலனாய்வாளர்கள் கடற்படை அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றனர்.
இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள கடற்படை தலைமை பயிற்சி மையமான ஐ.என்.எஸ் அக்ரானியில் மேலாண்மை மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட இந்திய மாலுமியை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
இந்த கைது குறித்து உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, புலனாய்வாளர்கள் அந்த மாலுமியை உள்ளூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பிடியாணை பெற்றனர்.
பின்னர், உயர் காவல் விசாரணைக்காக மாலையில் அவரை விஜயவாடாவில் உள்ள புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் ஹவாலா மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிகள் மூலம் மாலுமிக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடிய சாத்தியமான நிதிப் பரிவர்த்தனைகளை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.