‘மூட்டைய கட்டி ரெடியா இருங்க... இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்’ - டெல்லி காவல்துறைக்கு கரப்பான்பூச்சி கட்சி சவால்!

அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
‘மூட்டைய கட்டி ரெடியா இருங்க... இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்’ - டெல்லி காவல்துறைக்கு சிஜேபி சவால்!
Published on: 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்யக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 10ம் தேதியன்று போராட்டம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது இப்போராட்டம் மிகப்பெரியதாக இருக்கும் என்றும், அதற்கேற்றவாறு டெல்லி காவல்துறை தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சௌரவ் தாஸ் பேசியதாவது;

“நாங்கள் முறைப்படியான அறிவிப்பைச் சமர்ப்பித்துவிட்டோம், டெல்லி காவல்துறையிடமிருந்து அதற்கான ஒப்புதல் நகலையும் பெற்றுள்ளோம். எங்கள் கலந்துரையாடல்களின் அடிப்படையில், அவர்கள் எங்களிடமிருந்து ஒரு உறுதிமொழியையும் பெற்றனர், அதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் முடித்துவிட்டோம். போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்.

நாங்கள் அனைவரும் ஒரே பக்கம் இருக்கிறோம். மாணவர் அமைப்புகள், இந்தியா கூட்டணி மற்றும் பலர். மறுபுறம், இந்தியத் தேர்தல் ஆணையமும், பாஜகவும் மட்டுமே உள்ளன. பாஜக, இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் உதவியை நாடுகிறது.

நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் குழுக்களையும் சென்றடைய விரும்புகிறோம், ஏனெனில் எங்கள் போராட்டம் மக்களால் வலுப்படுத்தப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

அக்டோபர் 10 ஆம் தேதி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைவோம். கடந்த முறை நாங்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தபோது, ​​அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இந்த இயக்கத்திற்காக அதே ஒற்றுமையையும், போராட்டத்தையும் நாங்கள் வெளிப்படுத்துவோம்.” என தெரிவித்தார்.

கரப்பான்பூச்சி அமைப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகள்

  • ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவர் மீது குற்றவியல் வழக்கை பதிந்து நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும்.

  • நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போதைய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை நிறுத்திவைத்து, 2025 வாக்காளர் பட்டியலுக்கு திரும்ப வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும்வகையில் எஸ்ஐஆர் நடைமுறைகள் குறித்து ஆய்வுநடத்த சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

  • இந்தியத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023-ஆம் ஆண்டுச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பொதுமக்களின் நம்பிக்கையை பெறும் ஒரு புதிய சட்டத்தை இயற்றவேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com