கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Published on: 

தேயோபந்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்திற்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு, இங்குள்ள விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் ராஜீவ் தோமர் கூறுகையில், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரபோத் குமார் வர்மா, அப்போதைய தேயோபந்து காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரஜ்மோகன் யாதவ் மற்றும் உதவி ஆய்வாளர் வேட்பால் சிங் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 1.20 லட்சம் அபராதம் விதித்ததாக தெரிவித்தார்.

காவல்துறை வட்டாரங்களின்படி, யாதவ் பின்னர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். 58 வயதான சிங், ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தற்போது வேறொரு மாவட்டத்தில் பணியில் உள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை:

குற்றப்பத்திரிகையின்படி, இந்த சம்பவம் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது, ​​அந்த பெண்ணின் கணவர் தேயோபந்து காவல் துறையினரால் பொய்யான வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தனது கணவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்திற்கு சென்றபோது, ​​தான் இரண்டரை மாத கர்ப்பிணியாக இருந்தும், காவல் நிலைய பொறுப்பதிகாரி, உதவி ஆய்வாளர் மற்றும் சிலர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டினார். அவருடன் சென்றிருந்த அவரது மைத்துனி, இதை கண்டித்தபோது தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர் தோமர் கூறுகையில், அந்த பெண் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது தேயோபந்து காவல் நிலையத்திலும், அப்போதைய மூத்த காவல் கண்காணிப்பாளரிடமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தலைமை நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது; அவர்கள் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்தனர் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

தாமதமான தீர்ப்பு:

குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், காவல் சாவடி பொறுப்பாளராக இருந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறியதால், அவர் மீதான நடவடிக்கையை தொடங்க முடியவில்லை. நான்காவது குற்றவாளியான காவலரை அடையாளம் காணவோ அல்லது கண்டறியவோ முடியவில்லை. எனவே, யாதவ் மற்றும் சிங் ஆகியோருக்கு எதிராக மட்டுமே விசாரணை நடைபெற்றது என்று தோமர் கூறினார்.

தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தண்டனை பெற்ற இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தரப்பினர், தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனையாக அதிகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தோமர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

X