

வங்க கடலில் கடந்த மூன்று வாரங்களில் உருவாகும் மூன்றாவது புயல் 'அக்வான்' (Akvan) என பெயரிட்பட்டுள்ளது. இந்த புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள ஒடிசா அரசு தயாராகி வருகிறது. இதற்காக 74 மீட்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன; தெற்கு மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய முன்னறிவிப்பின் அடிப்படையில் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தினார். அப்போது, "உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அரசு முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து, 'அக்வான்' புயலாக வலுவடைந்துள்ளது. இது ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 790 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் நவம்பர் 19-ம் தேதி காலை வாக்கில் 'மிகத் தீவிர புயலாக' மாறக்கூடும் என்றும், மறுநாள் நண்பகல் நேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மற்றும் துனி (Tuni) பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், "ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் அக்டோபர் 28 அன்று ஆந்திராவில் கரையை கடந்த 'அர்னாப்' புயலின் போது பெய்தது போன்ற மிக அதீத கனமழை இருக்காது" என்று தெரிவித்தார்.
அமைச்சர் கூறுகையில், "கஞ்சம், கஜபதி, கந்தமால், ராயகடா, கோராபுட் மற்றும் மல்கான்கிரி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மாவட்டங்களில் நிவாரண மையங்களை திறந்து, அங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்குத் தேவையான கவனிப்பை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "சூழ்நிலையைச் சமாளிக்க 60 ODRAF குழுக்களையும், 14 NDRF குழுக்களையும் பணியமர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேவைக்கேற்ப கஞ்சாம், கஜபதி, கந்தமால், ராயகடா, கோராபுட், மல்கங்கிரி மற்றும் பூரி ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று புஜாரி தெரிவித்தார்.