

பாட்னாவில் இருந்து லக்னோவிற்கு 6E925 என்ற விமான சேவையை மேற்கொண்ட இண்டிகோ விமானம், நேற்று (புதன்கிழமை) லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு அதன் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விமானத்தில் இருந்த 104 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"விமானம் மாலை 4 மணியளவில் வழக்கமான முறையில் தரையிறங்கியது; யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தரையிறங்கிய பிறகு விமான நிலைய குழுவினர் சேதத்தைக் கவனித்தனர். அதைத் தொடர்ந்து இண்டிகோ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த விமானம் 'Aircraft on Ground' என அறிவிக்கப்பட்டது" என்று ஒரு அதிகாரி பிடிஐ-யிடம் தெரிவித்தார்.
"விமானம் தற்போது தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, மோசமான வானிலை நிலவியபோது விமானத்தின் மீது மின்னல் தாக்கியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது" என்றும் அந்த விமான நிலைய அதிகாரி மேலும் கூறினார்.
விமான நிறுவனம் தனது விசாரணையை நிறைவு செய்த பிறகு, இதுகுறித்த கூடுதல் தொழில்நுட்ப விவரங்கள் வெளியிடப்படும் என்று ஒரு தகவல் வட்டாரம் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் அவசரக்காலத் தரையிறக்கம் எதுவும் நடைபெறவில்லை என்றும், விமானம் லக்னோ விமான நிலையத்தில் வழக்கமான முறையிலேயே தரையிறங்கியது என்றும் அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டது.