

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்று (ஜூன் 15) காலை முதல் விமானச் சேவைகள் அங்கு தொடங்கின.
முதலாவதாக லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் சிறப்பு விமானம் நொய்டா விமான நிலையத்தில் வெற்றிகரமாக வந்திறங்கியது.
இந்த விமான நிலையத்திற்காக தங்களது விளைநிலங்களை வழங்கிய ஜேவார் பகுதியைச் சேர்ந்த 170 உள்ளூர் விவசாயிகள் இந்த முதல் விமானத்தில் பயணிகளாக லக்னோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜேவார் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தீரேந்திர சிங் தலைமையில் லக்னோ சென்றடைந்த இந்த விவசாயிகள், முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தை நேரில் சந்திக்கின்றனர்.
இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, நொய்டா - லக்னோ மற்றும் நொய்டா - பெங்களூரு இடையேயான தினசரி விமான சேவைகள் விரைவில் முழு வீச்சில் தொடங்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக, நாட்டின் 16 க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானச் சேவைகளை வழங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிநவீன விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதுவரை வான்வழிப் பயணங்களுக்கு டெல்லி விமான நிலையத்தையே முழுமையாக நம்பியிருந்த நொய்டா, காசியாபாத், மீரட் மற்றும் ஆக்ரா பகுதி மக்களுக்கு இந்த நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் தொடக்கம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.