

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அரசாங்க திட்டத்தின் கீழ் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, பெற்றோர்களிடம் இருந்து பச்சிளம் குழந்தை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பங்கேல் பகுதியை சேர்ந்த கெளதம் நந்தன் என்பவர் தனது நிறை மாத கர்ப்பிணியுடன் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது கெளதமின் மனைவிக்கு அக்டோபர் 6-ஆம் தேதி சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் நேற்று காலை சுமார் 8 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தபோது, மருத்துவரை சந்திக்க சென்றனர்.
அவர்கள் மருத்துவரை சந்திக்க சென்றபோது, கெளதம் தனது குழந்தையை அதன் பாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து பிரசவ வார்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பெண் குழந்தைக்கு அரசாங்க உதவித்தொகையான 5,000 ரூபாய் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் முக்யமந்திரி கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆறு கட்டங்களாக ரூபாய் 25,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த நிதியுதவியை பெறுவதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுவதால், குழந்தையை வேறு வார்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையின் பாட்டி, அந்த பெண்ணிடம் பச்சிளம் குழந்தையை கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவரை சந்தித்து விட்டு வந்த பெற்றோர்கள் குழந்தையை எங்கே என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து தனது மாமியார் கூறிய செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த கெளதம், மருத்துவமனை முழுவதும் தனது குழந்தையை தேடியுள்ளார்.
மருத்துவமனை முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு பெண் பச்சிளம் குழந்தையுடன் பைக்கில் ஏறி செல்வதை பார்த்தனர்.
இந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், டெல்லியில் வைத்து குழந்தையை திருடி சென்ற நபரை கைது செய்து, அவரிடம் இருந்து பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மேலும் குழந்தை திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.