ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 6 மொழிகளில் புதிய இணையதள செயலி அறிமுகம்

நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலையில் 30 லட்சம் டின் அரவணை கையிருப்பில் உள்ளது.
Devotees - Sabarimala Temple
Published on: 
Summary

சபரிமலை தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ரெயில் பஸ் போக்குவரத்து தகவல்களையும் பெறலாம் என பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

புதிய இணையதள செயலி

நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற பெயரில் புதிய இணையதள செயலி (போர்ட்டல்) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

6 மொழிகளில்...

இதுதொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நிசாமுதீன் கூறியதாவது:-

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதள செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் செல்போன், கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் விதத்தில் 'கியூ ஆர்' கோடுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 'வாட்ஸ்அப் சார்ட் போர்ட்' போன்றவையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இந்த செயலி மூலம் பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை புகார்களாக தெரிவிக்கலாம். குறிப்பாக காணாமல் போனவர்கள் விவரங்கள், தவறவிட்ட பொருட்கள் குறித்த விவரங்களை இந்த செயலியில் புகாராக பதிவு செய்யும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த செயலியில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அத்துடன் வாகன நிறுத்தம், ரெயில், பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களும் கிடைக்கும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய ஏற்கனவே இணையதளம் உள்ள நிலையில் தற்போது, அனைத்து விவரங்களுடன் 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலையில் 30 லட்சம் டின் அரவணை கையிருப்பில் உள்ளது.

X