

இந்திய பாதுகாப்புத் துறையின் விண்வெளி மற்றும் வான்வழிப் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, இந்தியாவின் முன்னணி பாதுகாப்புப் உற்பத்தி நிறுவனமான ஹெச்.ஏ.எல் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பிரபல 'சேஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய 'அரவல்லி' ஹெலிகாப்டர் என்ஜினை தயாரிக்க இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள 'சாஃபால் ஹெலிகாப்டர் என்ஜின்ஸ்' நிறுவனம் மூலம் இந்த என்ஜின்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இந்தியாவின் மிக பழமையான மலைத்தொடரான 'அரவல்லி'யின் பெயரைத் தாங்கி உருவாகும் இந்த இஞ்ஜின், 3,500 முதல் 4,000 ‘ஷாஃப்ட் ஹார்ஸ்பவர்’ திறன் கொண்ட அடுத்த தலைமுறை உயர் திறன் கொண்ட எஞ்சினாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த என்ஜின்களை உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைப்பு செய்தல், தயாரித்தல், விநியோகம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வரை அனைத்துமே இந்த ஒப்பந்தத்தின் கீழ் கையாளப்படும்.
ஹெச்.ஏ.எல் நிறுவனம் இந்திய முப்படைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கி வரும் 13 டன் எடை கொண்ட இந்திய பன்முக பயன்பாட்டு ஹெலிகாப்டர் (IMRH - Indian Multi-Role Helicopter) மற்றும் கடற்படைக்கான (DBMRH - Deck-Based Multi-Role Helicopter) ரக அதிநவீன ஹெலிகாப்டர்களுக்கு இந்த அரவல்லி இஞ்ஜின் பயன்படுத்தப்படவுள்ளது. பழைய ரஷ்ய தயாரிப்பு மி-17 ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இவை இந்திய ஆயுதப் படைகளில் இணைக்கப்பட உள்ளன.
பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைக் குறைத்து 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. ராணுவ பயன்பாட்டைத் தாண்டி, எதிர்காலத்தில் இந்த அதிநவீன இஞ்ஜின் தொழில்நுட்பம் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர்கள், நிவாரணப் பணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்துச் சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.