நான் பெண் இல்லை: பாலின அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்த நேஹா போரா!

பொதுவாக சமூகம் மனிதர்களை ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினக் கட்டமைப்புக்குள் மட்டுமே பார்த்துக் பழக்கப்பட்டிருக்கிறது.
Neha Bohra
Published on: 
Summary

டெல்லியின் முக்கிய மாணவர் தலைவர்களில் ஒருவரான ஐசா அமைப்பின் தேசியத் தலைவர் நேஹா போரா, தான் ஒரு பெண் அல்ல என்றும், தான் ஒரு 'நான்-பைனரி' அடையாளத்தைக் கொண்டவர் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தன்னைத் தவறான பாலின வார்த்தைகளைக் கொண்டு குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாணவர் போராட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவரான நேஹா போரா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது பாலின அடையாளம் குறித்த உண்மையை வெளிப்படுத்தினார். பல செய்தி நிறுவனங்களும் ஊடகங்களும் தன்னைத் தொடர்ந்து 'பெண்' என்ற பொருளில் 'ஷி' போன்ற பாலினச் சொற்களைப் பயன்படுத்தி அழைப்பது குறித்து அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். நான்-பைனரி நபர்களுக்கு உரிய சரியான உச்சரிப்புகளை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

'நான்-பைனரி'

பொதுவாக சமூகம் மனிதர்களை ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினக் கட்டமைப்புக்குள் மட்டுமே பார்த்துக் பழக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இருபிரிவுகளுக்குள்ளும் முழுமையாக அடங்காமல், தங்களை ஆண் என்றோ பெண் என்றோ பிரிக்க முடியாத தனித்துவமான பாலின அடையாளத்தைக் கொண்டவர்களைத் 'நான்-பைனரி' என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட பாலினத்தவராகவோ அல்லது குறிப்பிட்ட எந்தப் பாலின அடையாளமும் அற்றவர்களாகவோ உணர்வார்கள். இது ஒரு நபரின் உடல்ரீதியான அமைப்பைக் குறிப்பது அல்ல, மாறாக அவர்களின் உளவியல் சார்ந்த பாலின அடையாள வெளிப்பாடாகும்.

சமூக விழிப்புணர்வு

டெல்லி அரசியலிலும் மாணவர் இயக்கங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நேஹா போரா போன்ற முக்கியப் பொது ஆளுமைகள் தங்கள் பாலின அடையாளத்தை வெளிப்படையாகப் பேசுவது சமூகத்தில் பாலின பன்முகத்தன்மை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பாரம்பரியமான இருமைப் பாலினக் கட்டமைப்பைக் கடந்து, மாற்றுப் பாலின மற்றும் நான்-பைனரி நபர்களின் உரிமைகளையும் அவர்களின் சுய அடையாள மரியாதையையும் சமூகம் மற்றும் ஊடகங்கள் மதிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

X