

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த லடாக்கை சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வேண்டி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
இன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை சாபனா அஸ்மி ஆகியோர் ஜந்தர் மந்தர் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமானால் தன் மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்க வேண்டும் என கோரியுள்ளார்.
ஒரு துண்டு காகிதத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,
நிபந்தனை 1:
இந்தியக் கல்வி முறையில் அண்மையில் நடந்துள்ள தொடர் தோல்விகளுக்கும், குறிப்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அரசு முறைப்படி பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்தால் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்.
நிபந்தனை 2
ஒருவேளை மத்திய அரசு அதற்கு மறுக்கும் பட்சத்தில், எனக்கும் சிஜேபி கட்சி தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று எங்களது கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று நேரில் உறுதியளிக்க வேண்டும்.
நிபந்தனை 3
என்னுடைய மோசமடைந்து வரும் உடல்நிலையோ அல்லது பிற காரணங்களோ எங்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்ற மேற்சொன்ன உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.
இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால், இன்றைய தினமே தான் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதை 'சட்டவிரோத காவல்' என்று அவர் சாடியுள்ளார்.
தனது கடிதத்தின் முடிவில், "என்னுடைய நடமாடும் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சட்டவிரோதக் காவலில் இருந்து..." என்று கையெழுத்திட்டு சோனம் வாங்சுக் தனது குறிப்பை நிறைவு செய்துள்ளார்.