பீகாரில் மாணவர்களுக்கு பதில் NEET தேர்வு எழுதிய டாக்டர்கள்? சிக்கியது எப்படி?

தேர்வு மையத்திற்குள் போலி ஐடி கார்டுடன் நுழைந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள்..
NEET Scam
Published on

கடந்த மே 3, 2026 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் NEET-UG மறுதேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

இந்த தேர்வின் போது, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள்மாறாட்டக் கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக போலி தேர்வர்களை வைத்து தேர்வு எழுத முயன்ற வழக்கில், மருத்துவ மாணவர்கள் மற்றும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 24 பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்வன்று சிக்கியது எப்படி?..

நேற்று லக்கிசராயில் உள்ள ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்குள் மயங்க் கஷ்யப் என்ற வாலிபர் நுழைந்துள்ளார்.

அவர் தேர்வு நடத்தும் பயோமெட்ரிக் நிறுவனத்தின் ஊழியர் போல போலி அடையாள அட்டையை மாட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர் என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, நேற்று மாலை லக்கிசராயில் உள்ள கே.ஆர்.கே பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய தேர்வு மையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் யார்?

இந்த மோசடி வழக்கில் உயர்கல்வி படிக்கும் பல மருத்துவ மற்றும் நர்சிங் மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

கயா என மருத்துவ கல்லூரி மாணவர் இந்த நெட்வொர்க்கின் தலைவன் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இவர் ஏற்கனவே 2024 ஆண்டு நடந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த நர்சிங் மனைவி, ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர், டெல்லி ஷாதரா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர் மற்றும் நாலந்தா மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவர், அவரது சகோதரர் ஆகியோர் போலி ஐடி கார்டு மூலம் தேர்வு எழுத வந்ததாக பிடிபட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சில மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போதே கண்டுபிடிக்கப்பட்டனர். யாரும் முழுவதுமாக தேர்வை எழுதவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உள் ஆட்களின் உதவி..

தேர்வு மையங்களில் மாணவர்களின் கைரேகை மற்றும் முக அடையாளங்களைச் சரிபார்க்கும் பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்கள் இந்த கும்பலிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி விதிகளை ஏமாற்றிய மாணவர்கள்..

நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பீகாரில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தங்களது மாணவர்கள் யாரும் தேர்வு நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கடுமையான உத்தரவுகளை போட்டிருந்தன.

ஆனால் உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லிவிட்டு பாட்னா கல்லூரியை சேர்ந்த மயங்க் கஷ்யப் என்ற மாணவர் இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது? இதன் பின்னணியில் இருக்கும் பெரிய புள்ளிகள் யார் என்பது குறித்து பீகார் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com