நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

“இந்த முறையாவது எந்த குளறுபடியும் இல்லாமல்பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
NEET Re-exam: Rahul Gandhi Wishes Students!
Published on

நீட்-யுஜி மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், "இந்த முறையாவது எந்தவொரு குளறுபடிகளும், முறைகேடுகளும் இல்லாமல் தேர்வு நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார். மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, "நீங்கள் அனைவரும் இந்த மறுதேர்வை மிகச் சிறந்த முறையில், உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி எழுத வாழ்த்துகிறேன்.

தேர்வு நன்றாக அமையட்டும். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாக்கவும், அரவணைக்கவும், உங்களது பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு," என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "முழு தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன், உங்களைப் பாதுகாப்பேன்" என்றும் மாணவர்களுக்கு தைரியம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை நோக்கிப் பேசிய ராகுல் காந்தி, "தயவுசெய்து, இந்த முறையாவது தேர்வில் எந்தவொரு தொழில்நுட்பக் கோளாறுகளோ, குளறுபடிகளோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அளவுகடந்த மன உளைச்சலையும் அழுத்தத்தையும் சந்தித்துவிட்டார்கள். மீண்டும் ஒருமுறை அவர்களால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாது," என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து, மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டது. அதேபோல், நேற்று நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட குளறுபடியைச் சுட்டிக்காட்டியும் ராகுல் காந்தி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில், மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தேர்வு எழுத வேண்டும் என்றும், அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com