

நீட் தேர்வு மோசடி தொடர்பாக கைதான 14 பேர் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இந்த தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்னர் தெரியவந்தது. எனவே மே 12 அன்று தேசிய தேர்வு முகமை இத்தேர்வை ரத்து செய்தது. பின்னர், ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
இதனிடையே வினாத்தாள் கசிவு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள் தயாரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட மனிஷா மந்தரே, பி.வி. குல்கர்னி, மனிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகிய மூன்று ஆசிரியர்களும் அடங்குவர்.
கடந்த 18 ஆம் தேதி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி அஜய் குப்தா முன் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதி முன் ஆஜரான குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாங்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிட்டனர். மேலும் விசாரணையை எதிர்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
இதன்படி இன்று, இந்த 14 பேர் மீது குற்றவியல் சதி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கின் சாட்சி விசாரணை நவம்பர் 25ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் தொடங்கவுள்ளது