

தமிழகத்தின் அரியலூர் மாவாட்டத்தில் 2017-இல் அணைந்த ஓர் நெருப்பு இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் வரை கனன்றுகொண்டிருக்கிறது.
நீட் தேர்வினால் ஏற்பட்ட அழுத்தத்தில் 2017 செப்டம்பர் 1 அன்று தற்கொலை செய்துகொண்ட 17 வயது மாணவி அனிதாவை தமிழகத்தால் மறந்திருக்க முடியாது. அரசியல் கடந்து தமிழர்கள் அனைவரையும் உலுக்கிய அனிதா தற்கொலை நீட் வேண்டாம் என்ற நிலைப்பாட்டின் ஆரம்பப்புள்ளியாக மாறியது.
12ஆம் வகுப்பில் 1200 க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிக்குக்கான கட் ஆப்பில் 200க்கு 196.75 எடுத்திருந்தார் அனிதா. ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் மருத்துவ கனவை அடையும் மேலும் ஒரு படியாக அத்தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற அனிதாவால், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்வில் போதிய மதிப்பெண் ஈட்ட முடியாமல் போனது.
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்களின் அவரும் ஒருவர். ஆனால் நீதிமன்றம் அதற்கு இசையை மறுத்தது. இதனால மனமுடைந்த அவர் உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் எதிர்ப்பின் முகமாக அனிதா மாறினார்.
இன்றைய தமிழக முதல்வர் விஜயும் நடிகராக இருந்த அந்த சமயத்தில் அனிதா வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுத தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடும் மன அழுத்தத்தில் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவ்வாண்டு மட்டுமின்றி, கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து பல மாணவ மாணவிகள் நீட் தேர்வினால் தங்கள் இன்னுயிரை மாய்துகொண்டுள்ளனர்.
இதனிடையே வினாத்தாள் கசிவு மாணவர்களை கோபமும் விரக்தியும் கொள்ளச் செய்தது. அது அதிகாரத்தில் இருப்போர், இந்த முறைகேடுகளுக்கு பொறுப்புக்கூற மறுப்போர் மீதான கோபமாக மாறி இன்று வீதிகளில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. அமைதியான முறையில்.
நீட் மற்றும் பிற தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி ஜூன் 20 முதல் முன்னெடுத்த போராட்டம் வெற்றியடையும் தருவாயில் உள்ளது.
இந்த விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமர் மோடி நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டு, முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், வினாத்தாள் கசிவை தடுக்க மசோதா உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இருந்தபோதும் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டுள்ள இளைஞர்கள் சிரமங்களை புறந்தள்ளி தங்கள் மன உறுதியுடன் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களில் பல தமிழர்களும் அடங்குவர். அப்படி ஒருவர் தான் மணிரத்தினம். அனிதாவின் அண்ணன். ஆம் அன்று அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட அதே 17 வயது மாணவியின் அண்ணன்.
9 வருடங்கள் முன் தன் தங்கையை இழந்த மணிரத்னம், இன்று லட்சோபலட்சம் தங்கைகளின் எதிர்காலத்திற்காக ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.
போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " வினாத்தாள் கசிவு தொடங்கி தொலைதூரத்தில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற சின்ன சின்ன தவறுகள் 25 லட்சம் பேரை (இந்தாண்டு மே 3 நீட் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 25 லட்சம்- மறுதேர்வில் 20 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்) பாதித்துள்ளது. இது ஒரு தோல்வி அடைந்த மாடல்.
கல்வி அமைச்சரின் ராஜினாமா சிறிய படி தான். அது அவரின் பொறுப்பு. ஆனால் அது மட்டும் போதாது. எங்களுக்கு நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு வேண்டும். நீட் தேர்வை தடை செய்யுங்கள். நீட் தேர்வு என்பது விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது. பொருளாதாரத்தில் நலிந்த மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரானது" என்று உறுதிபட தெரிவித்தார்.