அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்

இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே
பிரதமர் மோடி, அண்ணா ஹசாரே
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக டெல்லியில் சிஜேபி தலைமையில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூலை 20 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படையினர் நடத்திய தாக்குதல் கண்டனத்தை குவித்து வருகிறது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அன்னா ஹசாரே தனது கடிதத்தில்,

அமைச்சர் ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது:

வழக்கமாக ஏதேனும் ஊழல் அல்லது முறைகேடு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு துறையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கு அதன் உயர் தலைமையே இறுதிப் பொறுப்பேற்க வேண்டும்.

தவறு நடக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தால் அரசு பலவீனமடையாது.

மாறாக, நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் அதிகரிக்கும். இது மற்ற அமைச்சர்களுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைந்து, அரசின் செயல்பாட்டை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றும்.

22 மாணவர்கள் தற்கொலை

2024இல் நீட் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. அதே நிலை இந்த ஆண்டும் தொடர்வதால் சுமார் 22 லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் ரத்து செய்யப்படுவது மற்றும் மறுதேர்வு குறித்த நிச்சயமற்ற தன்மையால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்படும் தாமதம், வினாத்தாள் கசிவுகள் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.

சோனம் வாங்சுக்

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மீது காவல்துறை நடத்திய பலப்பிரயோகம், அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய விதம் வேதனையளிக்கிறது.

அடக்குமுறையைக் கையாளாமல், அரசின் பிரதிநிதிகளை அனுப்பி அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

ஜனநாயக மற்றும் காந்திய வழியில் போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளைப் பொறுமையுடன் கேட்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்" என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com