போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
இடது - சோனியா செஹ்ராவத்
இடது - சோனியா செஹ்ராவத்
Published on

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கட்சி தலைமையில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஒரு மாதத்தை கடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இளைஞர்கள் மீது டெல்லி போலீசார், ரேபிட் ஆக்சன் போர்ஸ் (ஆர்ஏஎப்) அதிரடிப் படை உள்ளிட்ட மத்திய படையினர் லத்திகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். பெல்லட் துப்பாக்கியும் பய்னபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அமைதியான முறையில் அணிவகுத்து வந்த இளைஞர்கள் மீதான இந்த கோர தாக்குதல் பல தரப்பில் இருந்தும் கண்டனங்களை குவித்து வருகிறது.

இதனிடையே இந்த தாக்குதலில் அங்கம் வகித்த ஆர்ஏஎப் அதிரடிப்படை பெண் அதிகாரி சோனியா செஹ்ராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட் பதிவு பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

"தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்!" என ஒரு இறந்த கரப்பான்பூச்சியின் படத்துடன் அவர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

சோனியா செஹ்ராவத் பதிவு
சோனியா செஹ்ராவத் பதிவு

கண்டனம்

போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாகவும், காவல்துறையின் கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.

"அவர் எங்களைக் கரப்பான் பூச்சிகளாகப் பார்க்கிறார்; ஆனால் கரப்பான் பூச்சிகள் ஒருபோதும் அழிவதில்லை" என்று எக்ஸ் தளத்தில் அவ்வமைப்பு பதிவிட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா இந்த பதவியை பகிர்ந்து, "எங்கள் குழந்தைகளைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கும் இந்த அதிகாரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தீப்கே கேள்வி

ஜூலை 20 பேரணியின் போது, ஒரு வாகனத்தின் மீது நின்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, அதிகாரி சோனியா செஹ்ராவத்திடம்,

"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஒரு பெண் போராட்டக்காரரின் நெஞ்சில் தாக்கியதாகக் கூறுகிறாரே, இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இருப்பினும், மற்ற அதிகாரிகளைப் போலல்லாமல், சோனியா செஹ்ராவத் தனது கருத்துகளை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்டதாக அபிஜீத் திப்கே பாராட்டு தெரிவித்தார்.

சோனியா செஹ்ராவத் மறுப்பு

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்த சோனியா செஹ்ராவத்,

"எனது கட்டுப்பாட்டில் உள்ள வீரர்கள் யாருமே வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ பெண் போராட்டக்காரர்களைத் தாக்கவில்லை. அவர்கள் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, இடைவெளி விட்டு நிற்குமாறு நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் கூட்டத்திற்குப் பின்னால் இருந்தவர்கள் தள்ளியதால் மூன்று பெண்கள் கீழே விழுந்தனர். நெரிசலில் தான் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டதே தவிர, எனது வீரர்கள் அவர்களைத் தாக்கவில்லை."

போராட்டக்காரர்கள் கற்களையும் காலணிகளையும் வீசியதில் நானும் எனது வீரர்களும் காயமடைந்தோம். எனது தலைக்கவசத்தைக் கழற்றி வீசினர்; ஒரு வீரரைக் கூட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர்.

அத்தகைய சூழலில் தற்காப்புக்காகவே நாங்கள் செயல்பட வேண்டியிருந்தது. 12 வயது சிறுமியைக் கூடப் பாதுகாப்பற்ற முறையில் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்; அந்தச் சிறுமியை மீட்பதே எங்களுக்கு முதன்மைப் பணியாக இருந்தது" என்றார்.

யார் இந்த சோனியா செஹ்ராவத்?

சிஆர்பிஎப் - மத்திய காவல் படையின் கீழ் இயங்கும் ஆர்ஏஎப் திரடிப் படையில் உதவி கமாண்டன்ட்டாகப் பணியாற்றும் சோனியா செஹ்ராவத், சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ்பெற்றவர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இவர், தனது உடற்பயிற்சி வீடியோக்கள், நடன ரீல்ஸ்கள் மற்றும் ராணுவப் பயிற்சி தொடர்பான பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com