

இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இமாச்சல பிரதேசத்தின் மண்டி நகரில் இருந்து ரெஹர்தார் பகுதிக்கு ட்ரோன் மூலம் தேசிய கொடி செல்லப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை, ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்திற்கு பங்களிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தேசிய கொடியை விநியோகம் செய்து வருகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேசிய கொடியை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய கொடியுடன் மண்டி நகரில் இருந்து புறப்பட்ட ட்ரோன் ஒன்று, ரெஹர்தாரில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகத்தில் தரை இறங்கியது.
அங்கு, மூவர்ண கொடியை பெற்று கொண்ட அஞ்சல் குழுவினர், அதனை முறைப்படி ஒரு ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வை வடகிழக்கு மண்டலத்தின் மத்திய தகவல் தொடர்பு மற்றும் அபிவிருத்தி துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் சிந்தியா கூறுகையில், “புவியியல் தடைகளை தாண்டி ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய உறுதியுடன் இருக்கும் ஒரு புதிய இந்தியாவின் உணர்வை, இமாச்சல பிரதேசத்தில் ‘திரங்கா’ மேற்கொண்ட பயணம் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார்.