தேசிய கல்வி தினம்: எல்லோருக்கும் கல்வி என்ற கனவு கண்டவரின் பிறந்தநாளை போற்றும் நாள்

இந்தியாவின் முதல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான காரக்பூர் IIT 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ஆசாத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
Maulana Abul Kalam Azad - National Education Day
Published on: 
Summary

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 138-வது பிறந்தநாளான இன்று, நாடு முழுவதும் 'தேசிய கல்வி தினம்' என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் நவீன கல்வி அமைப்புக்கு அடித்தளமிட்ட அவரது தொலைநோக்குப் பார்வையைப் போற்றும் வகையில், நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்புக் கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கல்வி புரட்சி

1888-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிறந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத், சுதந்திரத்திற்குப் பிறகு 1947 முதல் 1958 வரை பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

கல்வி என்பது சமூகத்தின் உயர்மட்டப் பிரிவினருக்கு மட்டுமே உரியதாக இல்லாமல், சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, பெண்கள் கல்விக்கு முன்னுரிமை, ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் கற்பித்தல் மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

அவரது சேவையைப் பாராட்டும் விதமாக, 2008-ம் ஆண்டு முதல் நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்களின் அடித்தளம்

இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்காக, பல முதன்மை உயர்கல்வி நிறுவனங்களை ஆசாத் உருவாக்கினார்.

இந்தியாவின் முதல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான காரக்பூர் ஐஐடி , 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ஆசாத்தால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழுவை 1953-ல் அவர் தொடங்கி வைத்தார்.

அறிவியலைத் தாண்டி நாட்டின் கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில், சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் லலித் கலா அகாடமி ஆகியவற்றை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார்.

மேலும், 1945-ல் தொடங்கப்பட்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் ஊக்கமளித்தார்.

ஆசாத்தின் சிந்தனைகள்

தேசிய கல்வி தினம் என்பது வெறும் நினைவு நாளாக மட்டுமல்லாமல், இந்தியக் கல்வித் துறையின் அடிப்படை நோக்கங்களைச் சுயபரிசோதனை செய்யும் நாளாகவும் பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் சமமான கல்வி, அறிவியல் மனப்பான்மை மற்றும் கலாச்சார விழிப்புணர்வு ஆகிய ஆசாத்தின் கொள்கைகள், இந்தியா தனது கல்வித் துறையை நவீனப்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்திலும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

X