

பெங்களூரில் நடைபெற்ற சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.,
“பெங்களூரு தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு பெயர் நீக்கம் செய்யப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து, வளர்ந்து, படித்து, இதே தொகுதியில் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டேன். அப்படிப்பட்ட எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல நகைச்சுவை, இல்லையா?” என வீடியோவில் பேசியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் .
இதே ஆண்டு பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்திய தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு தொகுதியில் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்பதால், இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜூன் 2026-இல் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் ஜூலை மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் ஆகஸ்ட் 17 அன்று முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்படும். அதனையடுத்து மீண்டும் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று வெளியிடப்படும்.