

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அமெரிக்க நாட்டவரான மேத்யூ வான்டைக் மற்றும் 6 உக்ரைன் நாட்டினர் இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கான அனுமதியை அடுத்தாண்டு பிப்.24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் ட்ரோன் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் வழக்கில், தேசிய புலனாய்வு முகமையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மேத்யூ வான்டைக் செப்டம்பர் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
செப்டம்பர் மாதம் அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினின் போது, தனது குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு மாதம் அமெரிக்கா செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி அமெரிக்கா சென்று திரும்பிய அவர், இன்று (அக்.23) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தங்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக என்.ஐ.ஏ. தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா, மேத்யூ வான்டைக் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட உக்ரைன் நாட்டினர் இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டார்.
இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, விசா விதிமுறைகளை மீறி மணிப்பூர் மற்றும் மிசோரம் வழியாக மியான்மருக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.