பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் - ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் கை பறிபோன சோகம்

மும்பை போரிவலி பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க சுஃபியா ஷேக் என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
Woman Attacked on Mumbai Train: Thrown Off for Resisting Sexual Harassment
Published on: 
Summary

மும்பையில் உள்ளூர் ரெயிலில் வீடு திரும்பி கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட ஜிதேந்திர ஹிர்முகே என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் தனது பணியை முடித்துவிட்டு கடந்த நவம்பர் 4ஆம் தேதி வழக்கம்போல தனது வீட்டிற்கு உள்ளுர் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இளம்பெண் பயணம் செய்த ரெயில் பெட்டியில், 53 வயதான ஜிதேந்திர ஹிர்முகே என்பவரும் பயணம் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் இளம்பெண்ணை தவறாக தொடுவதற்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் இளம்பெண் அவரை திட்டிவிட்டு தனது செருப்பை கழற்றி அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், இளம்பெண்ணை ரெயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார்; இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த இளம்பெண், தண்டவாளத்தில் கீழே விழுந்தபோது ஒரு கை துண்டானது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தலையில் 16 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஜிதேந்திர ஹிர்முகே என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் வாக்குமூலம்

மேலும் இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறுகையில், “நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, என்னை அந்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார்.

அப்போது நான் அவரிடம், உனக்கு வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா? என கேட்டேன். நான் அவரை கடுமையாக திட்டியதை தொடர்ந்து, அவரும் என்னை திட்டினார்.

நான் அவரை செருப்பால் அடித்து விரட்ட முயன்றபோது, அவரும் என்னை செருப்பால் அடித்து, ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார்.

எனக்கு நீதி வேண்டும், என் வாழ்க்கை முழுவதும் பாழாகிவிட்டது. என் வீடு முழுவதையும் நான் தான் கவனித்து வந்தேன். ஒரே ஒரு கையால் என்னால் எதுவும் செய்ய முடியாது.

என் தலையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன, எனக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.

X