

மும்பையில் பாலஸ்தீனத்திற்கும் அங்கு அல்லலுறும் குழந்தைகளுக்கும் ஆதரவாக பட்டம் விடும் விழாவில் பங்காற்றிய சமூக செயல்பாட்டாளர் ஹர்ஷதா போரடே என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
பாலஸ்தீனதிற்கு ஆதரவு குரல் நல்கும் IPSP என்ற அமைப்பில் இயங்கி வரும் ஹர்ஷதா மாணவியும், கலைஞரும் ஆவார். பாலஸ்தீன குழந்தைகளுக்கு ஆதரவாக ஒரு வார சர்வதேச பட்டம் விடும் விழாவில் ஹர்சதா பங்காற்றினார்.
இந்நிலையில் நேற்று மாலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 6-7 போலீசார் நுழைந்தனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அவர்கள் அனைத்து பொருட்களையும் களைத்து சோதனையிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹர்சதா அவர்கள் தன் மீது உடல் ரீதியான பலத்தை பிரயோகித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணி வரை அவர்கள் சோதனையிட்டுள்ளனர். ஆனால் இக்கிய புத்தகங்களும், புகைப்படங்களும் போஸ்டர்களும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் வீட்டில் பகத் சிங், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பொன்மொழிகளும் எழுதப்பட்டிருந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த பட்டம் விடும் விழாவை போராட்டம் என வரையறுத்து அதில் பங்காற்றியதற்காக இதுபோன்ற அத்துமீறலில் போலீசார் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் தொடர்புடையவர்களை மும்பை போலீஸ் குறிவைப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. ஹர்சதா வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியுள்ள மும்பை போலீஸ் மும்பையை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாற்றியுள்ளதாக அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.