

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர்பீஸ்ட், குஜராத் மாநிலம் சூரத்தில் வசிக்கும் மாயா குப்தா என்ற இந்தியப் பெண்ணுக்குச் செய்த அதிரடி உதவி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாயா குப்தா என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம், மிஸ்டர்பீஸ்ட்டை சந்திப்பதே தனது லட்சியம் என்று கூறி தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தினமும் அவரை டேக் செய்து தனது 365 நாள் பயணத்தை ஆவணப்படுத்தினார். இவரது இந்த விடாமுயற்சிக்கு இணையத்தில் ஏராளமானோர் ஆதரவு அளித்தனர்.
இந்தச் சவாலின் சிறப்பம்சமாக, கடந்த ஒரு வருடமாக அவர் தனது சமூகப் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டுள்ள செயலையும் தொடர்ந்தார். இவரின் இந்த நற்செயல் மிஸ்டர்பீஸ்ட்டின் கவனத்தை ஈர்த்தது.
இவர்களைச் சந்தித்தபோது மிஸ்டர்பீஸ்ட் பேசுகையில், "கடந்த ஒரு வருடமாகத் தனது உள்ளூர் மக்களுக்கு உணவளித்து, எனது வீடியோக்களில் தொடர்ந்து என்னை டேக் செய்து வந்த மாயா இதுதான்" என்று கூறி அவரைப் பாராட்டினார். மேலும், அவரது சமூகப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக 10,000 டாலர் (சுமார் ரூ. 9.5 லட்சம்) பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
தான் பெற்ற தொகையைத் தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்வேன் என்று மாயா குப்தா தெரிவித்தார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.