பிரதமர் மோடி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு

வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை இழந்த இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இந்திய மாநிலங்கள் முழுவதும் 5,269 பெரியவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஏஜென்சி நிறுவனமான சி-வோட்டர் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

இந்த கணக்கெடுப்புக்காக இந்திய மாநிலங்கள் முழுவதும் 5,269 பெரியவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தேங்கி நிற்கும் ஊதியங்கள், உயர் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மழுங்கடிப்பதால் அதிகமான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கைத்தரம் குறித்து நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு முந்தைய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானோர், அடுத்த ஆண்டில் சாதாரண மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம் மோசமடையும் என எதிர்பார்க்கிறார்கள்.

இது 2013-க்குப் பிறகு மிக உயர்ந்த சதவீதமாகும் என தேர்தல் ஏஜென்சி நிறுவனமான சி-வோட்டரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்களில் நீர் வரவழைக்கும் அளவில் தொடர்ந்து உயரும் உணவுப் பணவீக்கம் இந்தியக் குடும்ப வரவு செலவுத் திட்டங்களை அழுத்தி, செலவழிக்கும் சக்தியைக் குறைத்துள்ளது.

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதன் மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்றவர்கள் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறது. மோடி பிரதமரான பிறகு விலைகள் உயர்ந்துள்ளன என்றும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பணவீக்க விகிதம் தங்கள் வாழ்க்கைத்தரத்தை பாதகமாக பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பலர், கடந்த ஆண்டில் தங்களுடைய தனிப்பட்ட வருமானம் ஒரே மாதிரியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com