ரூ.81,000 பென்சன் பணத்தை பறித்து மர உச்சிக்கு சென்ற குரங்கு - அடுத்து நடந்தது என்ன?

இமாச்சலின் சிம்லா பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Himachal Pradesh monkey steals pension money
Published on: 
Summary

இமாச்சலப் பிரதேசத்தில் வங்கியில் பணம் செலுத்துவதற்காக நபர் ஒருவர் சென்றபோது, அவரிடமிருந்து சுமார் எண்பதாயிரம் ரூபாயை குரங்கு ஒன்று பறித்து கொண்டு மரத்தின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஊழியர் ஒருவர் தனது 81,800 ரூபாய் பென்சன் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை பையில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

சிம்லா பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்து வரும் சூழலில், அந்த நபர் கொண்டு சென்ற பணப்பையை குரங்கு ஒன்று பறித்து கொண்டு மரத்தின் மீது ஏறியது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், தனது பணத்தை மீட்டுத்தரும்படி உள்ளூர் மக்களின் உதவியை நாடினார். இதையடுத்து மரத்தின் மீது பணப்பையுடன் அமர்ந்திருந்த குரங்கை உள்ளூர் மக்கள் ஓசை எழுப்பி விரட்டினர்.

இதைத்தொடர்ந்து அந்த குரங்கு தான் வைத்திருந்த பணப்பையை கீழே போட்டது. அப்போது அந்த பையில் இருந்த சுமார் 80,300 ரூபாய் பணம் மட்டும் சிதறி கீழே விழுந்தது.

இதையடுத்து அந்த பணத்தை சேகரித்து, அதன் உரிமையாளரிடம் உள்ளூர் மக்கள் ஒப்படைத்தனர். அந்த நபர் கொண்டுவந்த பணம் ஓரளவு மீட்கப்பட்ட நிலையில், ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பணம் மட்டும் கிடைக்கவில்லை.

டி.சி அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம், அரசு வளாகத்தின் உள்ளேயே நடந்துள்ளதால், குரங்குகளின் தொல்லை கட்டுப்படுத்த முடியாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காட்டுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X