

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், ஒரு பயணியின் பையில் குரங்கின் மண்டை ஓடு இருப்பதை கண்டறிந்தனர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு பயணியை சோதனை செய்தனர்.
அந்த பயணி டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது, பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்கிடமான ஒரு மண்டை ஓடு ஒன்று இருந்ததை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அதனைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த கைப்பையை முழுமையாக செய்தனர்.
இந்த பாதுகாப்பு சோதனையின் போது மீட்கப்பட்ட மண்டை ஓடு ஒரு குரங்கினுடையது என்று அந்த பயணி தெரிவித்ததாக தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பயணி இறுதியில் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மீட்கப்பட்ட மண்டை ஓடு பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இது வனவிலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பயணிக்கு மண்டை ஓடு எங்கிருந்து கிடைத்தது என்பதையும், அதை டெல்லியிலிருந்து ஐதராபாதுக்கு கொண்டு சென்றதன் நோக்கம் என்ன என்பதையும் கண்டறியும் பணியில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.