VIDEO: உயிரிழந்த மூதாட்டிக்கு கடைசி நேரத்தில் குரங்கு கட்டிபிடித்து அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி

நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
VIDEO: உயிரிழந்த மூதாட்டிக்கு கடைசி நேரத்தில் குரங்கு கட்டிபிடித்து அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் உள்ள பி.வி.ஹள்ளி ராயரா தொட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதம்மா (வயது 80). இவர் ராயரா தொட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார்.

சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர் கடந்த திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். காலையில் அவரது உடல் மகள் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது ​​திடீரென ஒரு குரங்கு உடலை நோக்கி ஓடி வந்தது. சில கணங்கள் அது பார்வதம்மாவின் முகத்திலும், தலையிலும் சாய்ந்து பாசம் காட்டியது. விவசாய குடும்பத்தை சேர்ந்த பார்வதம்மா தன் கணவர் வெங்கடய்யாவுடன் அடிக்கடி அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவ்வழியே செல்லும் போது குரங்குகளுக்கு உணவளித்தார்.

2010-ல் கணவர் இறந்த பிறகு சன்னப்பட்டணா அருகே பிரேமம்மாவுடன் வசிப்பதற்காக அவர் குடிபெயர்ந்த பிறகும் அவர் மீண்டும் மீண்டும் அந்த கோவிலுக்கும் திரும்பி வந்து உணவளித்தார். தொடர்ந்து வழிதவறி வந்த குரங்கு கூட்டத்திற்கு நீண்ட காலமாக உணவளித்து வந்தார். இருப்பினும் காலப்போக்கில் வயது முதிர்வு காரணமாக அவரால் வரமுடியவில்லை.

அவரது இந்த பாச செயலை குரங்கு ஞாபகத்தில் வைத்து இறந்த பார்வதம்மா முகத்தை பார்த்ததும் ஓடி வந்து குரங்கு தனது பாசத்தை காட்டியது.

அசைவற்ற மூதாட்டி உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தியது. குரங்கின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் மனதையும் நெகிழ செய்தது. பிறகு அருகில் இருந்த ஒரு மூதாட்டியின் மடியில் வந்து அமைதியாக அமர்ந்தது. பார்வதம்மா உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் வரை அந்த குரங்கு அங்கேயே அமர்ந்திருந்தது. மனிதர்களுக்கு செய்த உதவிகளை மறக்கும் இந்த உலகில் ஒரு குரங்கு தனக்கு ஆதரவு காட்டிய மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் அங்கு இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பார்வதம்மா அவரது மருமகன் அபிஷேக் மற்றும் கிராமத்தை சேர்ந்த மக்கள் இதை வீடியோ எடுத்தனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பார்வதம்மா மகள் பிரேமம்மா கூறுகையில், என் அம்மாவின் உடலுக்கு அருகில் ஏறி குரங்கு பாசத்துடன் அவரை கட்டிப்பிடித்தது. அது அழுதுகொண்டிருப்பது போல் தோன்றியது. மக்கள் கூட்டம் கூடியபோதும் அந்த குரங்கு அங்கேயே இருந்தது. நள்ளிரவு வாக்கில் ஒருவர் அதற்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். அது அதை சாப்பிட்டுவிட்டு, என் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தது. விடியும் வரை காத்திருந்தது. பின்னர் அந்த குரங்கு கோவிலுக்கு அருகில் விடுவிக்கப்பட்டது என்றார்.

உணவு கொடுத்துப் பரிவு காட்டுவது மனிதநேயத்தின் மிக உயரிய பண்பாகும். பசித்த ஜீவன்களுக்கு உணவளித்து பசியை போக்கிய மூதாட்டிக்கு கடைசியில் குரங்கு காட்டிய இந்த கனிவான அன்பு அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com