ரெயில் தாமத்தால் தவறவிட்ட விமானம்: ஜம்மு தம்பதிக்கு ரூ. 63 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ரெயில் 4 மணி நேரம் தாமதமாக டெல்லி வந்ததால் விமானத்தை தவறவிட்டதாக வழக்கு.
இந்திய ரெயில்வே
இந்திய ரெயில்வே
Published on: 

டெல்லி துரந்தோ ரெயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால், விமானத்தை தவறவிட்ட ஜம்முவை சேர்ந்த தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்க இந்திய ரெயில்வேக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4 மணி நேரம் தாமதம்

ஜம்முவை சேர்ந்த மோகித் சிங் பாவ் மற்றும் அவரது மனைவி தாமினி பில்லோரியா கடந்த 2022 டிசம்பர் 19-ந்தேதி டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு டெல்லியை சென்றடைய வேண்டியிருந்தது. ஆனால், சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.50 மணிக்குத்தான் டெல்லி வந்தடைந்தது.

இதற்கிடையே தம்பதியினர் காலை 7.15 மணிக்கு டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ரெயில் தாமதத்தால் விமானத்தை தவறவிட்டனர்.

விமான டிக்கெட்டுக்காக புதிதாக 35,699 ரூபாய் செலவு

இதையடுத்து புதிய விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.35,699 மற்றும் டெல்லியில் ஹோட்டலில் தங்குவதற்கு ரூ.2,500 என மொத்தம் ரூ.38,199 செலவிட்டனர்.

இதனால் தங்களுக்கு நிதி இழப்பாக 60 ஆயிரம், மன உளைச்சல் மற்றும் சிரத்திற்காக ரூ. 50 ஆயிரமை், அத்துடன் வழக்கு செலவுகளுக்காக ரூ. 30,000 வழங்கக்கோரி ஜம்முவில் உள்ள நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், பனி மூட்டம் காரணமாக ரெயில் தாமதமானதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான உரிய ஆதாரங்களை ரெயில்வே சமர்ப்பிக்கவில்லை என ஆணையம் குறிப்பிட்டது.

நுகர்வோர் ஆணையம் உத்தரவு

இதனை தொடர்ந்து, புதிய டிக்கெட் மற்றும் ஹோட்டல் செலவுக்கு ரூ.38,199, மன உளைச்சலுக்கு ரூ. 20,000, வழக்குச் செலவுக்கு ரூ.5,000 என மொத்தம் ரூ.63,199 வழங்க ஆணையம் உத்தரவிடப்பட்டது.

மேலும், 7.5 சதவீத வருடாந்திர வட்டியுடன் ஆறு வாரங்களுக்குள் இழப்பீட்டை வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

X