மெட்ரோ விரிவாக்கம்: கிரேட்டர் நொய்டா வரை ரூ. 2,390 கோடியில் அக்வா லைன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுமார் 2,390 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த விரிவாக்கத் திட்டமானது மொத்தம் 8.449 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டுள்ளது.
Noida Metro
Published on: 

டெல்லி தேசிய தலைநகர் வளையத்தில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நொய்டா செக்டார் 51 முதல் கிரேட்டர் நொய்டா செக்டார் 4 வரை மெட்ரோ பாதையை நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 2,390 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த விரிவாக்கத் திட்டமானது மொத்தம் 8.449 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டுள்ளது. இப்பாதையில் முழுக்க முழுக்க உயர்த்தப்பட்ட முறையில் ஐந்து புதிய மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் நிறைவடைவதன் மூலம் இப்பகுதி மக்கள் தினசரி அலுவலகங்களுக்குச் செல்வது எளிதாக மாறுவதுடன், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மெட்ரோவுடன் நேரடி இணைப்பு

இந்த விரிவாக்கப்பட்ட புதிய வழித்தடமானது, நொய்டா செக்டார் 61 பகுதியில் டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைன் பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் எந்தவித தடையுமின்றி டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதியின் பிற இடங்களுக்கும் எளிதாகப் பயணம் செய்ய முடியும். இந்த புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் மொத்த இயக்கத்தில் உள்ள மெட்ரோ வலையமைப்பின் நீளம் 71.878 கிலோமீட்டராக உயரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் புதிய குடியிருப்புப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளதால், லட்சக்கணக்கான பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நவீன மெட்ரோ சேவையின் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள்.

X