குழந்தை துஷ்பிரயோக விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா இந்தியா தலைவருக்கு மூன்றாவது முறையாக சம்மன்

மெட்டா நிறுவனம் ஒரு வாரம் கழித்து தனது பதிலை சமர்ப்பித்தது.
Meta
Published on

குழந்தைகள் பாலியல் சீண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSEAM) தொடர்பானதாக கூறப்படும் விளம்பரங்கள் குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக, மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜராக கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக பிபிசி ஐ மீடியா (BBC Eye Media) அறிக்கை கூறியதை அடுத்து இந்த வழக்கு எழுந்துள்ளது.

ஜூலை 3-ஆம் தேதியன்று, தேசிய குழந்தை நல ஆணையர் (NCPCR) இந்த வழக்கை தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு, அந்த தொழில்நுட்ப நிறுவனத்திடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. மெட்டா நிறுவனம் ஒரு வாரம் கழித்து தனது பதிலை சமர்ப்பித்தது.

மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன்:

இந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கண்டறிய, NCPCR ஒரு முறையான விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளது. நடைபெற்று வரும் இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, மெட்டா இந்தியா தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.

செப்டம்பர் 9 ஆம் தேதி மூத்த அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய ஒரு வாரத்திற்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது. இணையதளங்கள் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டும் உள்ளடக்கங்கள் கிடைப்பதாகவும், அவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஆணையத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

சி.எஸ்.இ.ஏ.எம். (CSEAM) விவகாரத்தில் NCPCR தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாக, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை புகாரளிப்பது தொடர்பான தனது கொள்கையை மெட்டா நிறுவனம் திருத்தியமைத்துள்ளது. தற்போது மெட்டா நிறுவனம், இதுபோன்ற வழக்குகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கும் (I4C) புகாரளிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்களில் வரும் CSEAM தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு கடுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், அதுபோன்ற அனைத்து விளம்பரங்களையும் முடக்குமாறு இன்ஸ்டாகிராமை கேட்டுக்கொண்டிருந்தது.

விளம்பர கொள்கைகளில் தடை:

இந்தியாவில் இன்ஸ்டாகிராமில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் இயங்கி வருவதாக பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த விளம்பரங்கள், பயனர்களை டெலிகிராம் அரட்டை செயலிக்கு வழிநடத்துவதற்காக "கற்பழிப்பு வீடியோ" மற்றும் "குழந்தை வீடியோ" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அங்கு, பயனர்கள் அத்தகைய வீடியோக்களை ரூ.99 போன்ற குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

மெட்டாவின் விளம்பர கொள்கைகள் நிர்வாணம் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடை செய்திருந்தபோதிலும், பேஸ்புக்கில் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றியதாக பிபிசி விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com