

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மேகாலயா மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது, மேகாலயா மாநில காவல்துறைக்கு இந்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமான பிரசிடெண்ட்ஸ் கலர் விருதை அவர் வழங்க உள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் இந்த பெருமையைப் பெறும் ஒரு சில காவல் துறைகளில் மேகாலயாவும் ஒன்றாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரின் வருகை மற்றும் இந்த உயரிய அங்கீகாரம் குறித்து மேகாலயா காவல்துறை இயக்குநர் விவேக் சியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் பிரசிடெண்ட்ஸ் கலர் விருதை வழங்குவதற்காக இங்கு வருகிறார். இது மேகாலயா காவல்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை மற்றும் சாதனையாகும்.
காவல் துறையினரின் தியாகம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமே இந்த விருது. வரும் நாட்களில் பொதுமக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய மேகாலயா காவல்துறை தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை ஒட்டி மேகாலயா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரின் பயணப் பாதைகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அதிரடிப்படை மற்றும் சிறப்புப் பிரிவுகள் உட்பட சுமார் 1,500 காவல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விஐபி வருகையின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம், எந்தெந்த வழிகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்த ஆலோசனைகளைத் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் முன்னரே வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ராஷ்டிரபதி கா நிஷான்' என்று அழைக்கப்படும் இந்த விருது, இந்தியாவின் ஒரு ராணுவப் பிரிவு, பயிற்சி நிறுவனம் அல்லது மாநில/யூனியன் பிரதேச காவல் துறைக்கு அவர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும்.
இந்த கௌரவத்தைப் பெறுவதன் மூலம் மேகாலயா காவல்துறை புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.