மன்மோகன்சிங் நினைவிடம்: மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர்

மன்மோகன்சிங் குடும்பத்தினர் விரும்பிய இடத்தை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்தது.மத்திய அரசு ஒதுக்கிய இடம் 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
மன்மோகன்சிங் நினைவிடம்: மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர்
Published on

புதுடெல்லி:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு டெல்லி நிகாம்போத் சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடந்தன. பொது சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடத்துவதா என்று காங்கிரஸ் கட்சி ஆட்சேபனை தெரிவித்தது.

மன்மோகன்சிங்குக்கு நினைவிடம் கட்டும் இடம் தொடர்பாகவும் கருத்து வேறுபாடு எழுந்தது. முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் பலரது நினைவிடங்கள் அமைந்துள்ள ராஷ்டிரீய ஸ்மிரிதி ஸ்தலத்தில் மன்மோகன்சிங் நினைவிடத்துக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டது.

மன்மோகன்சிங் குடும்பத்தினர் விரும்பிய இடத்தை ஒதுக்குமாறு காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்தது.

இந்நிலையில், மத்திய அரசு ஒதுக்கிய இடத்தை மன்மோகன்சிங் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக அவர்கள் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, தங்களது சம்மதத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும், மன்மோகன்சிங்கின் 3 மகள்களும், அவர்களுடைய கணவன்மார்களும் அந்த இடத்தை நேரில் பார்த்துள்ளனர். இதனால் இதுதொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு ஒதுக்கிய இடம் 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவிடம் அருகே அமைந்துள்ளது.

அடுத்த நடவடிக்கையாக, மன்மோகன்சிங் நினைவாக ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கும். அதில் உறுப்பினர்களாக யார் யாரை நியமிப்பது என்று மன்மோகன்சிங் குடும்பத்தினர் தெரிவிப்பார்கள். அறக்கட்டளை பெயருக்கு நிலத்தின் உரிமையை மத்திய அரசு மாற்றும்.

அதைத்தொடர்ந்து, நினைவிடம் கட்ட மத்திய அரசு ரூ.25 லட்சம் மானியத்தை விடுவிக்கும். கட்டுமான பணியில் ஈடுபட உள்ள மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com