மராத்தி மொழித் தேர்வு : மும்பையில் ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்து ஸ்தம்பித்தது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

மும்பையில் மராத்தியர்கள் 36% மட்டுமே உள்ளதால், மொழியைக் காக்க புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Mumbai Auto Strike
Published on

மும்பையின் அடையாளமாகத் திகழும் 'காளி-பீலி' டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு மராத்தி மொழி அறிந்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் காரணமாக பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளால் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, நகரில் கடுமையான ஆட்டோ, டாக்ஸி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களின் குற்றச்சாட்டு

பயணிகளிடம் பேசத் தேவையான அடிப்படை மராத்தி சொற்களைக் கற்றுக்கொள்ள ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் RTO அதிகாரிகள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மிகவும் கடினமான கேள்விகளைத் தங்களைக் கேட்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், பல ஆண்டுகளாக மும்பையில் வசித்து வரும் வடமாநில ஓட்டுநர்கள் மற்றும் படிக்காத முதியவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

1,200-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்

ஆகஸ்ட் 20 முதல் தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், இதுவரை 8,217 ஓட்டுநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில், 604 பேருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் தழுவிய அளவில் முதல்கட்ட சோதனையிலேயே 1,268 ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நோட்டீஸ் பெற்றவர்கள் 1 மாதத்திற்குள் மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் எச்சரித்துள்ளார்.

ஆட்டோக்கள் தட்டுப்பாடு & 3 நாள் வேலைநிறுத்தம்

RTO அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயந்த பல ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தியுள்ளனர்.

மேலும், மொழித் தேர்வின் பெயரால் ஓட்டுநர்கள் மிரட்டப்படுவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி மும்பையின் கண்டிவாலி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை மாலை முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் 3 நாட்கள் அதிரடி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பணிக்குச் செல்லும் பொதுமக்கள், ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் ஆட்டோ, டாக்ஸி கிடைக்காமல் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஓலா, உபெர் போன்ற ஆப்-அடிப்படையிலான டாக்ஸிகளுக்கும் இந்த விதி பொருந்துவதால் ஒட்டுமொத்த மும்பையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "இங்குள்ள இந்தி பேசும் சகோதரர்களை மராத்தி மொழியில் நிபுணர்களாக்குவது எங்களது நோக்கமல்ல. ஆனால், அவர்களுக்கு மராத்தி மொழியின் அடிப்படை வேலை அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதற்கான காலக்கெடு ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொழியின் அடிப்படையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படுவதை எங்கள் 'மகாயுதி' அரசு அனுமதிக்காது" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மும்பையில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 36% ஆக உள்ள நிலையில், வடமாநிலப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மராத்தி மொழியைக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறை தற்போது மும்பையை உலுக்கி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com