மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி

தண்டவாளங்களைக் கடப்பது சட்டவிரோதமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கைகள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.
Railway Administration
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராகுல் பங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கால்களில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகச் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இறங்கி நடப்பது பதிவாகியுள்ளது.

ரெயில் நிலையத்திற்குள் ரெயில் வரவிருப்பதை அறிவிக்கும் ஒலி பெருக்கியின் சத்தமும், தூரத்தில் ரெயில் வரும் சத்தமும் கேட்கும் நிலையிலும், அவர் வாக்கரின் ஆதரவோடு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மெதுவாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தண்டவாளங்களைக் கடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும், மற்றொரு புறம் இந்திய ரெயில்வே நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கின்றன என்ற முக்கியமான விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.

நடைமேடைகளுக்கு இடையே செல்வதற்கு மின்தூக்கி அல்லது சாய்வுப் பாதை வசதிகள் முறையாக இயங்காததே அல்லது இல்லாததே இதுபோன்ற அபாயகரமான முடிவுகளை எடுக்க மக்களைத் தள்ளுகிறது எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ரெயில்வே நிர்வாகம் ஆபத்தான தண்டவாளக் குறுக்கீடுகளைத் தடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து நிலையங்களிலும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com