

நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்பு படேல் என அடையாளம் காணப்பட்டுள்ள மாணவி, தனது தங்கையோடு தங்கி கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப்பெற்று வந்துள்ளார்.
2023 முதல் கோட்டாவில் வசித்து வந்த இருவரும் ஜூலை மாதம் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
நேற்றிரவு பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த தங்கை கதவை தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குஷ்பு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தை கைப்பற்றி எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டாவிற்கு விரைந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவியின் அறையிலிருந்து எந்தவித தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்திருந்ததாகவும், அந்த மதிப்பெண் திருப்தி அளிக்காததால் அவர் கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்திலும் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவந்தவர்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.